ஸ்பாம் பத்தி தெரிஞ்சுக்கோ - About Spam Mails

கீழ்கண்டவற்றில் எந்த ஒரு செயலும் நமது கணிணி “ஸ்பாம்” (SPAM) தாக்குதலுக்கு உட்படக் காரணமாகலாம்.

1. இணைய தளத்தில், சில தேவையில்லாத தளங்களுக்குச் சென்று “BROWSE” செய்து வருவது.

2. பாலின செய்திகள் அல்லது அது குறித்த படங்களைப் பார்க்க, ஏதேனும் தளத்தில் நமது மின் முகவரியினைக் கொடுத்து விடுவது.

3. முன்பின் அறியாத இணையதளத்தில் அல்லது நபர்களிடம் நமது மின் முகவரியினைத் தருவது.

4. VIRUS பரவியதால் செயற்குறைபாடுடைய கணிணியிலிருந்து “Floppy Disk”, குறுந்தகடுகள் (Compact Disk) அல்லது வேறு ஏதேனும் ஒரு வகையில் செய்திகள், படங்கள் மற்றும் புள்ளி விவரங்களை பிரதி (Copy) எடுத்து நமது கணிணிக்கு மாற்றுவது.

5. கடவுள் பற்றிய நமது பக்தி அல்லது பயம், இவற்றைத் தவறாகப் பயன்படுத்தும் வகையில், இவற்றின் படங்களை மின்னஞ்சல் மூலம் நமக்கு அனுப்பி பலருக்கும் இத்தனை நாட்களுக்குள் அனுப்பாவிடில், பெரிய தீமை உண்டாகும் என்று பயமுறுத்தும் அல்லது அனுப்பினால் நண்மை உண்டாகுமென்று உக்குவிக்கும் “தொடர் மின்னஞ்சலில்” தொக்கி நிற்கும் VIRUS PROGRAM அல்லது “COOKIES மூலமும் இது சாத்தியமாகலாம். இந்த வகையில் நம்மையறியாமலே “ஸ்பாம்” (SPAM) எனும் தொல்லை தொடர, நாமும் ஒரு காரணமாகிறோம்.

6. வறுமை, பசி, நோய் முதலியவைகளால் அவதிப்படும் உயிர்களிடத்து நமக்கிருக்கும் இரக்க உணர்வுகள், தாஜ்மஹால், ஐஸ்வர்யாராய், அழகான மலர்கள், குழந்தைகளின் படங்கள் இவற்றினைப் பாராட்டும் நமது கலையுள்ளம் போன்ற நல்ல மனித நேய உணர்வுகளைத் தவறாகப் பயன்படுத்தும் வகையில் இவற்றின் படங்களை நமக்கனுப்பி, அதனை நாம் நமக்குத் தெரிந்தவர்களுக்கெல்லாம் நாமே விரும்பி அனுப்பச் செய்யும் தந்திரங்களால், நம்மையறியாமலே “ஸ்பாம்” (SPAM) எனும் தொல்லை தொடர, நாமும் ஒரு காரணமாகிறோம்.

7. சில இணைய தளங்களில், நமக்குப் பயன்படும் நல்ல செய்திகளை (உதாரணத்திற்கு: ஸிமென்டெக் நிறுவன வெளியீடான “கணிணி சார்ந்த பாதுகாப்பு ஆலோசனைகள்” என்ற புத்தகத்தின் “PDF” பதிப்பினை) “இலவசமாகத் தருவதாக ஆசை காட்டி” நமது மின்னஞ்சல் முகவரியினைப் பெற்றுக் கொள்வதும், பிறகு அதன் மூலம் “ஸ்பாம்” (SPAM) தொல்லைகளுக்கு நம்மை ஆளாக்குவதும் வழக்கமாகிவிட்டது.

8. சில நேரங்களில், நாமே தேவையான ஒரே செய்தியினைப் ஒன்றுக்கும் மேற்பட்ட மின்னஞ்சல் முகவரிகளுக்கு அனுப்புகையில், “ஸ்பாம்” (SPAM) விளக்கப்படி அவையும் “ஸ்பாம் (SPAM) எனக் குறிப்பிடப்படும் அபாயம் உள்ளது. a. சில ஸ்பாம் (SPAM) கட்டுப்பாட்டு அமைப்புக்களில், ஒரு குறிப்பிட்ட மின்முகவரியிலிருந்து ஒரே செய்தியினை, 20க்கும் மேற்பட்ட மின் முகவரிகளுக்கு ஒரே நேரத்தில் அனுப்பப்பட்டால், அதனை “ஸ்பாம்” என இனம் காணுமாறு செயல் நிரைகள் .
எழுதப்பட்டிருக்கின்றன

இது குறித்து நான் ஏன் கவலைப்பட வேண்டும்?


முதலாவதாக, நாம் இந்த சமுதாயத்தின் ஒரு பொறுப்பான நபர். ஒரு நல்ல குடிமகனும் கூட. நம்மால் எவருக்கும் எந்தவிதமான தீங்கும் வராமல் பார்த்துக் கொள்வது நமது கடமையாகும். எனவே நமது கணிணியுடன் தொடர்பு கொள்ளும் எவரும் “ஸ்பாம் (SPAM) தொல்லைக்காளாகக் கூடாது.


அடுத்தபடியாக, நம்மில் பெரும்பாலோர் கணிணியைப் பயன்படுத்தி, அயல் நாட்டில் இருக்கும் நமது உறவினர்களுடன் நேருக்கு நேர் (CHAT) உரையாடுகிறோம்; மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்கிறோம். இவை மூலம் பல அந்தரங்கமான (Personal Information) செய்திகலைப் பறிமாறிக் கொள்கிறோம். அவை பாதுகாக்கப்பட வேண்டும்.


நம்மில் பலர் கணிணியைப் பயன்படுத்தி, இணைய தளம் மூலம் தொலை பேசிக் கட்டணம், மின்சாரக் கட்டணம், வங்கிக் கணக்கு மற்றும் பணப்பட்டுவாடா செய்ய வேண்டிய தேவை உடையவர்களாக இருக்கிறோம். அவை அடுத்தவர்களுக்குத் தெரியாது, பாதுகாப்பானதாக இருப்பது அவசியம்.

தற்பொழுது பல சேவைகள் “On Line Transaction” என்ற வகையில், பயணச் சீட்டுப் பதிவு, மருத்துவ ஆலோசனைகள் போன்ற அத்தியாவசியத் தேவைகளைக் கணிணி மூலம் நிறைவேற்றிக் கொள்கிறோம். வயதானவர்கள், உடற் குறைபாடுடையவர்கள் முதாலானோருக்கு இது ஒரு வரப்பிரசாதம்.

ஆனால் நம்மில் பெரும்பாலோர் ஒரு சில சுய நலமிகளாலும், விவரம் அறியாதவர்களின் செயல்களாலும் “ஸ்பாம்” (SPAM) எனும் இந்தத் தொல்லைக்காளாகி, கணிணியின் முழுப் பயனையும் பெற முடிவதில்லை.

இன்றைய காலகட்டத்தில், நமது அலுவலகப் பணிகள் அனைத்தும் கணிணிமயமாக்கப்பட்ட நிலையில், நாம் இந்த “ஸ்பாம்” (SPAM) குறித்த விழிப்புணர்வு உடையவர்களாக இருக்க வேண்டுவது காலத்தின் கட்டாயம்.


இந்த “ஸ்பாம்” (SPAM) எனும் தொல்லையினைக் கட்டுப்படுத்துவதும் ஒரு தொழில்; பணம் செய்யும் வாய்ப்பு என்ற வகையில், அதெற்கெனவே பல தனி அமைப்புக்கள் துவங்கப்பட்டு, விசேஷக் கண்காணிப்பும் நடக்கிறது. இவர்களைப் பல பன்னாட்டு நிறுவனங்கள் தங்களுக்காக நியமித்திருக்கின்றன.

அறிந்தோ அறியாமலோ, “AIDS” நோய் வந்தவர்களை இந்த உலகம் ஒதுக்கி வைப்பது போல, பன்னாட்டுத் தகவல் தொடர்பு அணுகுமுறையில், விரும்பத்தாகாத விளைவுகளை சமுதாயத்திற்கு ஏற்படுத்தும் “ஸ்பாம்” (SPAM) உண்டாக நமது கணிணி காரணமாக இருப்பதாகத் தெரிய வந்தால், மேற்படி கண்காணிப்பு நிறுவனங்கள் நமது கணிணியினை இணைய தளம் மூலம் தொடர்பு கொள்ள விடாமல் தடுக்கவும் கூடும். இதன் பின் விளைவுகளை ஒரு நிமிடம் எண்ணிப் பாருங்கள். நமது உரிமைகள் மறுக்கப்படக் காரணமான இந்த “ஸ்பாம்” (SPAM) என்பது எவ்வளவு கொடுமையானது என்று புரியும்.


ஸ்பாம் (SPAM) குறித்த தற்போதைய நிலை

“ஸ்பாம் (SPAM)” எனப்படும் இந்தத் தொல்லை அறவே தவிர்க்க முடியாத ஒன்று என்பதும், இதனை ஏற்றுக் கொண்டு இதனுடன் வாழப் பழகிக்கொள்ள வேண்டும் என்பதுமாம். இதனுடன் வாழ, இதனைக் கட்டுப்படுத்தும் வழியினை அறிந்து கொள்வது ஒன்றே அறிவுடமையாகும். இதனைக் கட்டுப்படுத்த இதனைப் பற்றி இன்னும் விளக்கமாக அறிய வேண்டியது அவசியமாகிறது. இந்த வகையில் “வைரஸ்” செயல் நிரை (VIRUS APPLICATION) பற்றியும் மற்றும் “ஹேக்கர்ஸ்” (HACKERS) எனப்படும் குறும்பர்களைப் பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டியவர்களாக இருக்கிறோம்.


மின்னஞ்சல் மற்றும் இணைய தளம் சார்ந்த பணிகள் அதிகமாகிவிட்ட இந்த நாளில், “ஸ்பாம் (SPAM)” எனப்படும் இத்தொல்லை விலக்கப்பட வேண்டியது அவசியமாகிறது. இதனை வேறு கோணத்திலிருந்தும் பார்க்கலாம்.


“ஸ்பாம்” (SPAM) என்பதற்குக் கீழ்க்கண்டவாறு பொருள் கொண்டால், நமது பார்க்கும் கோணம் வேறுபடும்.

“Simple & Plain Advertisement through Mail” = (SPAM).

“Small Product Advertisement through Mail” = (SPAM)

“Services & Products Advertisement through Mail” = (SPAM)

எனவே இவையனைத்திலும், மின்னஞ்சல் மூலம் விளம்பரம் என்பதுதான் அடிப்படை செய்தி என்பதும் அவற்றுக்கான செலவு நம்மிடம் பெறப்படுகிறது; சில சமயங்களில், நாம் வேண்டாத செய்தி நமக்கு வரும் பொழுது அது நமக்கு எரிச்சலூட்டுகிறது என்பதுதான் பிரச்சினை என்பதும் தெளிவு.


நாம் “ஸ்பாம் (SPAM) - வேண்டாதது; நான் விரும்பிக் கேட்காத ஒரு செய்தி என எண்ணும் பொழுது, அதே செய்தி வேறு யாரேனும் ஒருவருக்கு அவராகக் கேட்காத பொழுதும், அவரது கணிணியில், மின்னஞ்சல் மூலம் வந்திருந்து, அதனால் அவரே எதிர்பார்க்காத நண்மை உண்டானால், அவருக்கு அது “ஸ்பாம்” இல்லை!! உடல் ஊனமுற்றோருக்கு, முதியோர் இல்லத்தில் அனாதையாக இருப்பவர்களுக்குத் தங்களைத் தேடி வரும் இத்தகைய செய்திகள் வரவேற்கத் தக்கதே. எனவே எது “ஸ்பாம்” (SPAM) என்பதே மனிதருக்கு மனிதர் மாறுபடுகிறது.

நமது தொலைபேசி எண், கைபேசி எண் மற்றும் முகவரியினை இனவாரியாகப் பிரித்தெடுத்து, அதனை விலைக்கு விற்கும் முறை கூட ஒரு வகை “ஸ்பாம்” (SPAM) ஆகும். முகவர் மூலம் பெற்று நம்மைத் தொடர்பு கொண்டு “விசா மற்றும் மாஸ்டர் கார்டு” தர அணுகும் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் இதனால் பலன் பெறுகின்றன. இந்தியாவிலேயே 6 இடங்கள்தான் இத்தகைய “DATA BASE” வைத்திருப்பதாகவும், பல பன்னாட்டு நிறுவனங்கள் அவற்றின் சேவையைப் பயன்படுத்துவதாகவும், இது ஒரு சுய தொழில் வாய்ப்பு எனவும் கூறுபவருக்கிடையே, இதனைத் தவறு என்று சொல்பவருக்கு என்ன மதிப்பு இருக்கும்?

உங்கள் கைபேசியில் யாரேனும் முன்பின் தெரியாதவரிடமிருந்து அழைப்பு வந்தால், எதேனும் ஒரு பொருள் அல்லது சேவைக்கு அதன் மூலம் விளம்பரம் செய்யப்பட்டால், அது உங்களுக்குத் தொல்லை என நீங்கள் நினைத்தால் மட்டுமே அது “ஸ்பாம்”.

ஆயுத உற்பத்தி ஒரு தொழில் என்றான பிறகு, அதனை விற்பதும், பயன்படுத்துவதும் தவறல்ல என்றும் ஆன பின், அதனால் உண்டாகும் அழிவிற்கு யாரைக் குறை கூறுவது? “ஸ்பாம்” (SPAM) செயல்பாடுகளும் அது போலத்தான். விளம்பரம் செய்வது ஒரு தொழில் என்றான பிறகு, மிகக் குறைவான செலவில் மிக அதிகமான நபர்களுக்குப் பொருட்களையும், சேவைகளையும் பற்றி விளம்பரப்படுத்த மின்னஞ்சல் ஒன்றுதான் வழியென்றான பிறகு, அம்மின்னஞ்சலைப் பயன்படுத்த முயற்சிப்பது பற்றி என்ன சொல்ல முடியும்!! நமது தொலைக்காட்சிப் பெட்டியும், நமது கைபேசியும் (CELL PHONE) அந்தந்த முகவர்களால் பிறர் பொருட்களையும், சேவைகளையும் விளம்பரம் செய்யப் பயன்படுத்தப் படலாம் என்றால் நமது கணிணியும் ஏன் பயன்படுத்தப் படக்கூடாது? “ஸ்பாம்” (SPAM) என்பதனைக் கட்டுப்படுத்துவது ஏன் சிரமமான ஒன்று என்பது இப்பொழுது புரிந்திருக்கும்.

இதில் தவறு என்று சொல்ல ஒரே ஒரு காரணம் அதனால் உண்டாகும் கால விரையம், பணச்செலவு இவை நம்மை பாதிக்கிறது என்பதே. தொலைக்காட்சியிலாவது பொழுது போக்காகச் சில கலை நிகழ்ச்சிகளை, சில திரைப்படப் பாடல்களை அல்லது சில திரைப்படங்களை வெளியிட்டு அதனிடையே சில விளம்பரமும் செய்கிறார்கள். இல்லாவிடில், இந்தப் பொழுது போக்கு அம்சத்திற்காக நாம் செலவு செய்ய வேண்டியிருக்கும். ஆனால், கைபேசியிலும், கணிணியிலும் அது போல நமக்கு எந்த விதமான ஆதாயமும் இல்லை. அது தவிர, நமக்குக் கணிசமான இழப்பு உண்டாகிறது. சில சமயங்களில், சட்ட ரீதியான சிக்கல் உண்டாகிறது என்பதே பிரச்சினை. தொலைக்காட்சி ஒரு பொழுது போக்கு சாதனம் என்பதால் அந்த விளம்பர இடையீடுகளைப் பார்க்க வேண்டாமென்றால், தொலைக்காட்சியினை இயக்காமலிருக்கலாம். அதனால் இழப்பு அதிகம் இல்லை. ஆனால் கணிணியும் மின்னஞ்சலும், நம்து தொழிலுக்கும் பயன்படுவதால், இதனை இயக்காமலிருக்க முடியாது.

இது நாள் வரை “ஸ்பாம் (SPAM) எனப்படும் மின்னஞ்சல் மூலம் விளம்பரம் செய்ய முனைவோர், “வைரஸ்” எனப்படும் கணிணியின் செயல்பாட்டைக் குறைக்கும் அல்லது அறவே செயலிழக்கச் செய்யும் செயல்நிரை எழுதுவோர் மற்றும் அத்து மீறிப் புகுதல் என்ற வகையில் நமது கணிணியினைத் தங்கள் வசப்படுத்தும் “ஹேக்கர்ஸ்” (Hackers) எனப்படும் குறும்பர்கள் ஆகியோர் தனித்தனியே இருந்து பணியாற்றிய நிலை மாறி, “பணம்” பண்ணுவது ஒன்றே குறி என்ற வகையில் மூவரும் ஒன்று சேர்ந்து, கூட்டாக நமது கணிணியினை முறைகேடான செயல்களுக்குப் பயன்படுத்தும் நிலை உருவாகியிருக்கிறது. இதுவரை வெறும் விளையாட்டாக, தங்களின் செயல் நிரை எழுதும் திறமையினைக் காட்ட, ஒரு குறிப்பிட்ட நபர் அல்லது நிறுவனத்தின் பேரில் தங்களுக்கு இருக்கும் வெறுப்பினைக் காட்ட அவர்களது கணிணியினை செயலிழக்கச்செய்வது, அவர்களது அந்தரங்கங்களைப் பிறர் அறியச் செய்வது என்ற நிலை மாறி, இது ஒரு நல்ல ஆதாயம் தரும் தொழில் என்றாகிவிட்டது.


“ஸ்பாம்” (SPAM) என்பது ஆரம்பத்தில் மின்னஞ்சலை விளம்பரத்திற்காகப் பயன்படுத்தும் உத்தியாக செயல்பட்டது. மிகக் குறைந்த செலவில் மிக அதிகமான நபர்களுக்குப் பொருட்களையும் சேவைகளையும் அறிமுகம் செய்யும் வகையில்தான் நல்ல வருவாய் பெறும் வசதி உள்ளது. எனவே “ஸ்பாம்” (SPAM) உருவாக்குவோர், தாங்கள் உருவாக்கும் “ஸ்பாம்” (SPAM) இன்னும் சிறப்பாகச் செயல்படத் தேவையான தனித்திறமை வாய்ந்த செயல் நிரைகளையும், கருவிகளையும், சேவைகளையும் தரும் பல்வேறு முறைதவறிய சேவை வழங்குபவர்களை நாடுவது வழக்கமாகிவிட்டது.


அவர்களிடையே நிலவும் உறவு முறை விவரங்கள் பின் வருமாறு;


வைரஸ் செயல் நிரை எழுதுவோரும் நமது கணிணியின் பாதுகாப்பு ஏற்பாடுகளை உடைத்து, அத்து மீறிப் பிரவேசிக்கும் ஹேக்கர்ஸ் எனும் குறும்பர்களுமாகச் சேர்ந்து, “ஸ்பாம்” (SPAM) பரப்பும் செயல்பாட்டிற்குத் தேவையான வசதிகளைச் செய்து கொடுக்கிறார்கள். நமது கணிணியின் பாதுகாப்பு ஏற்பாடுகளை உடைத்து, நமது கணிணி அவர்கள் வசம் வருவதற்கான ஏற்பாடுகளைச் செய்வது இவர்களின் பொறுப்பு.

“ஸ்பாம்” (SPAM) சேவை அளிப்போர், தனித் திறமை (SPECIALISTS) வாய்ந்த செயல் நிரை எழுதுவோரையும் மற்றும் வசதிகளையும் உருவாக்கிக் கொடுக்கிறார்கள்


“ஸ்பாம்”(SPAM) மென்பொருள் ஒருங்கிணைப்பாளர்கள் சேவை, நிர்வாகம் மற்றும் பிரசார அமைப்பினைப் பார்த்துக் கொள்கிறது.


தங்களது தனித் திறமைகளைக் காட்ட, தங்களுக்கு உரிய மரியாதை தரத் தவறிய சமுதாயத்தின் மீது வஞ்சம் தீர்த்துக் கொள்ளச் செயல் நிரை எழுதுவது என்றெல்லாம் இருந்த நிலை மாறி, அவர்களின் திறமைகள், ஒன்றுமறியாத, சற்றே கவனக் குறைவாக இருக்கும் கணிணி பயன்படுத்துவோரை ஏமாற்றவும் அதன் மூலம் பணம் பண்ணவும் பயன்படுகிறது என்பது ஒரு வருத்தமளிக்கும் செய்தியாகும்.

சில சமயங்களில், கணிணி செயல்பாட்டிற்கு உதவுவதாகக் கூறிக்கொள்ளும் “வைரஸ்” கட்டுப்பாட்டுச் செயல்நிரை உருவாக்கும் பெரிய நிறுவனங்கள் கூட இத்தகு அமைப்பினைத் தங்களின் வியாபாரம் பெருக (மறைமுகமாக, கணிணி பயன்படுத்துவோருக்குப் பாதகமான சூழலை உருவாக்கி, அவர்களது கணிணியினை “வைரஸ்”, “ஸ்பாம்” மற்றும் அத்துமீறல் செயல்களுக்கு ஆளாகுமாறு செய்த பின்னர் பிறகு அதனை நீக்கத்) தங்களின் “வைரஸ்”, ஸ்பாம் கட்டுப்பாட்டுச் செயல் நிரைகளைப் பயன்படுத்துமாறு பரிந்துரை செய்வதாக ஒரு செய்தியும் கூட உண்டு. பெரும்பாலான “இலவச” மென்பொருட்களும், “ADWARE, SPYWARE செயல் நிரைகளும் இதில் அடங்கும்.


இந்த முறைதவறிய கூட்டணிக்கும், முறையாகச் செயலாற்றி இவர்களின் முயற்சியினை முறியடிக்கும் “ஸ்பாம்” (SPAM) எதிர்ப்பாளர்களுக்கும் நடக்கும் போட்டி ஒரு தொடர் கதை. இருவரும் தங்கள் அறிவினை நாளுக்கு நாள் வளர்த்துக் கொண்டு, யார் அறிவுடையவர் என்றறிய நடத்தும் போட்டியில், இந்த “ஸ்பாம் (SPAM) எனும் பிரச்சினையை மென்மேலும் பெரியதாக வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

இப்பொழுது இந்த “ஸ்பாம்” (SPAM) பிரச்சினை நமது இல்லத்தில் உள்ள கணிணியினை பாதிக்காது எப்படிக் காத்துக் கொள்வது எனப் பார்ப்போம்.


முதலாவதாக வீட்டில் உள்ள கணிணியினை “ஸ்பாம்” (SPAM) தாக்குதலில் இருந்து எப்படிக் காப்பது எனப் பார்க்கலாம். கொஞ்சம் உங்கள் பொது அறிவினைப் பயன்படுத்தினாலே இந்த “ஸ்பாம்” (SPAM) எனும் தொல்லையினைக் கட்டுப்படுத்த உங்களால் முடியும்.
மின்னஞ்சலே “ஸ்பாம்” (SPAM) பரவ வகை செய்யும் ஒரு முதன்மையான சாதனமாக இருக்கிறது. எளிமையாக, எல்லோராலும் பயன்படுத்தப்படும் ஒரு சாதனம், மிகவும் குறைந்த செலவில் (பெரும்பாலும் அடுத்தவர் செலவில்) எண்ணிலடங்கா நபர்களுக்கு, அவர்கள் விரும்பாத பொழுதும், விளம்பரங்களை எடுத்துச் செல்ல வழி வகை செய்யும் சாதனம்.

இது பாலினக் கவர்ச்சித் தளங்களை அறிமுகப்படுத்துகிறது. எதிர்பாராத வகையில் உடனடியாகக் கோடீஸ்வரர் ஆகலாம் என்று ஆசை காட்டும் விளம்பரங்களை அளிக்கிறது. உங்களை எந்த வகையிலும் மயக்கி, “வைரஸ்” செயல் நிரைகளை உங்கள் கணிணியில் இறக்குமதி செய்து உங்கள் கணிணியினை “ஜோம்பீஸ்” (ZOMBIES) எனப்படும் அடிமைக் கணிணியாகப் பயன்படுத்தி, அதன் மூலம் உங்களையும் “ஸ்பாம்” (SPAM) எனும் குற்றத்திற்கு உடந்தை ஆக்குகிறது. இதெற்கெல்லாம் மேலாக, தங்கள் கணிணி பிறரால் ஆளப்படுகிறது என்பதும், “ஸ்பாம்” (SPAM) என்ற குற்றத்திற்குத் தாமும் துணை போகிறோம் என்று கூட அறியாத, விவரமறியாதவர்கள் இயக்கும் எல்லைக் கட்டுப்பாடற்ற ஒரே தொடர்பு சாதனம் என்பதனாலேயே, குறும்பர்களால் (HACKERS) பெரிதும் விரும்பப்படும் ஒன்று.

கீழ்க்கண்ட 8 வகைகளில் “ஸ்பாம்” (SPAM) அனுப்புபவர்கள் தங்கள் செயலைச் செய்ய முடிகிறது.

1. இணைய தளத்தைப் பயன்படுத்துவோர் தங்கள் மின் முகவரியினை, முன்பின் அறிமுகமில்லாத சந்தேகத்துக்குறிய தளத்தில் பதிவதன் மூலம் அவர்கள் மின் முகவரியினைத் திருடுவது எளிதாகிறது.
2. பயன்படுத்துவோர் குழுமத்திலிருந்து (USENET Forum) திருடுவது.
3. பயன்படுத்துவோர் உரையாடும் பகுதியிலிருந்து (CHAT SESSION) திருடுவது.
4. “SPAMBOT' என்ற செயல் நிரை+கணிணி கூட்டணியின் மூலம் @ என்ற சங்கேதக் குறி இருக்கும் வார்த்தைகளை மின் முகவரி என்ற வகையில் சிறைபிடித்து, பரிட்சார்த்த முறையில் முயற்சி செய்து “ஸ்பாம்” பரப்புவது.
5. பணம் கொடுத்து வாங்கும் மின்முகவரிகளைப் பயன்படுத்துவது. (இதற்காகவே சிலர் பணி செய்கிறார்கள்; பலன் அடைகிறார்கள்; அமெரிக்காவில் மின் முகவரியுள்ள ஒரு குறுந்தகடு 100 டாலர்!!). இங்கும் கூட, சில நிறுவனங்கள் இத்தகு விவரங்களைத் தருகின்றன என்பது, கைபேசியில் தாங்கள் சற்றும் எதிர்பார்க்காத வகையில், முன்பின் அறிமுகமில்லாத நபரிடமிருந்து விளம்பரம் பெறுவோர் அறிந்த ஒன்று.
6. பயன்படுத்துவோருக்குக் கவர்ச்சிகரமான தொடர் மின்னஞ்சல் அனுப்பி அதன் மூலமும், அவர்களாகவே பதிவு செய்யத் தூண்டும் சில ஏமாற்றும் வழிகளிலும் மின் முகவரியினைப் பெற்று, “ஸ்பாம்” பரப்புவது.
7. உங்களின் DOMAIN பெயரில், சில கூட்டமைப்பபி்ல் மின் முகவரியினை உண்டாக்குவது (உ-ம் @yahoo.com என்றிருந்ததால், அதனுடன் kumar என்று சேர்த்து, kumar@yahoo.com என ஒரு மின் முகவரியினை உண்டாக்குவது.
8. உங்கள் அலுவலக SERVER பதிவு செய்திருக்கும் மின் முகவரியினைத் திருடிப் பயன்படுத்துவது.

இந்த “திருடுவது” என்ற காரணத்திற்காகத்தான் உங்கள் கணிணியின் பாதுகாப்பு வசதிகளை உடைக்க “வைரஸ்” செயல் நிரை எழுதுவோர் மற்றும் குறும்பர்களின் துணை நாடப்படுகிறது.


எனவே “ஸ்பாம்” (SPAM) பரவாமல் தடுக்க, மின்னஞ்சலைப் பயன்படுத்தும் பொழுதும் இணைய தளங்களுக்கு வருகை தரும் பொழுதும் சற்றே கவனமாக இருங்கள்.


“ ஸ்பாம்” (SPAM) அறவே வராமல் தடுக்க விரும்பினால், இணைய தளத்திற்குத் தொடர்பே கொடுக்காதீர்கள்!!!! தனிக் கணிணியாகப் பயன்படுத்துங்கள்!! பிரச்சினையே இல்லை!!

இது முடியாது என்றால்,

• எந்நேரமும் உங்கள் கணிணி இணைய தளத்துடன் தொடர்பு கொள்ளத்தான் வேண்டுமா எனத் தீர்மானியுங்கள். வேண்டாமெனில், செய்திப் பறிமாற்றங்கள் முடிந்தவுடன், இணையதளத் தொடர்பினைத் துண்டித்துவிடுங்கள்.


• இணையதளம் மற்றும் மின்னஞ்சலைப் பயன்படுத்துமுன், முதலில் உங்கள் கணிணியில் ஒரு நல்ல “ஸ்பாம்” (SPAM) மற்றும் “வைரஸ்” (VIRUS) கட்டுப்பாடு ஏற்பாட்டைச் செய்யுங்கள்.



• YAHOO, GOOGLE, HOTMAIL போன்ற பெரிய அமைப்புக்களின் மின்னஞ்சல் சேவையினப் பயன்படுத்துகள். அவர்களுக்குப் பணம் ஒரு பொருட்டல்ல. எனவே VIRUS CONTROL, SPAM BLOCKER போன்ற சிறப்பான கருவிகளைப் பயன்படுத்தி, வைரஸ், ஸ்பாம் இவற்றைக் கட்டுப்படுத்த முடிவதால், உங்களுக்குத் தொல்லையும், செலவும் குறையும்.

• ஒவ்வொரு முறையும் இணைய தளத்திற்குச் சென்று, உங்கள் செயல் முடிந்து கணிணியின் தொடர்பறுக்குமுன் அல்லது வேறு செயலினை ஆரம்பிக்கு முன், உங்கள் கணிணியில், “குக்கீஸ்” (COOKIES), நீங்கள் சென்று வந்த தள விவரங்கள் (HISTORY) மற்றும் அதன் மூலம் உருவான கோப்புகளை (FILES) முழுமையாக அழித்து விடுங்கள். பிறகே கணிணியின் செயல்பாட்டை நிறுத்த வேண்டும்.



• முதலில், எந்த ஒரு பொருளும் இலவசமாகக் கிடைக்கும் என்ற நினைப்பை ஒதுக்குங்கள். இலவசமாகத் தருவதாக ஆசை காட்டித்தான், தங்கள் தளத்திற்கு வருகை தரப் பலர் உங்களை ஊக்குவிக்கிறார்கள். இந்த வகை இலவசம் என்ற “மாய வலையில்” விழுந்த பலர் “ஸ்பாம்” (SPAM) வந்தபின் தான் அதனை உணருகிறார்கள்.

• உங்களுக்கு முன் பின் அறிமுகமில்லாத நபர் அல்லது நிறுவனம் இவர்களிடமிருந்து ஏதேனும் மின்னஞ்சல் வந்தால், உடனடியாகத் திறந்து பார்க்காதீர்கள். “PREVIEW” என்ற மின்னஞ்சலில் இருக்கும் அமைப்பைப் பயன்படுத்தினாலும் கூட, “ ஸ்பாம்” உருவாக்கும் நபர்கள் உங்கள் மின்முகவரியினைப் பிடிக்க ஒரு நூதன தொழில் நுணுக்கத்தை அமைத்து, உங்கள் முகவரியினைப் பதிவு செய்து விடுவார்கள். வழக்கமாக மின்னஞ்சலைப் பயன்படுத்துபவர்களுக்கு, யார் தங்களைத் தொடர்பு கொள்ள முயலுவார்கள் என்பது தெரிந்திருக்கும்.

• மின்னஞ்சல் மூலம் வரும் விளம்பரத்தை நம்பி, எந்தப் பொருட்களையும் (On Line Trading) வாங்க முயற்சிக்காதீர்கள். இத்தகு எண்ணத்தையே ஊக்குவிக்காதீர்கள்.

* இத்தகு மின்னஞ்சலுக்கு எந்த விதமான பதிலும் அளிக்காதீர்கள்; ஒரு முறை நீங்கள் அளிக்கும் பதில், உங்கள் மின் முகவரி உண்மை என்பதனை அவர்களுக்கு உறுதி செய்வதால், மென்மேலும் அவர்களிடமிருந்து உங்களுக்கு மின்னஞ்சல் வருவது உறுதி.

• தொடர் மின்னஞ்சல் குறித்த எந்த ஒரு வேண்டுகோளுக்கும் செவிசாய்க்காதீர்கள். இது ஒரு “முகவரிச் சுழற்சி”. ஒவ்வொருவரும் அவர்களுக்குத் தெரிந்தவர்களுக்கு இம்மின்னஞ்சலை அனுப்ப, மேலும் புது முகவரிகள் சேரும். அவர்கள் எல்லோருக்கும் “ஸ்பாம் (SPAM) மின்னஞ்சல் தொடரும். மற்றவர்களுக்கும் “ஸ்பாம் (SPAM) தொல்லை பரவ நீங்கள் காரணமாக இருக்காதீர்கள்.

* ஏதேனும் ஒரு காரணத்தால் அச்செய்திகள் பயனுடையவை என்று நீங்கள் உறுதியாக நம்பினால், அந்தச் செய்தியினை ஒரு புது மின்னஞ்சலாக, உங்களிடமிருந்து செல்வதாக அனுப்புவதன் மூலம் சங்கிலித் தொடரினைத் துண்டித்து விடுங்கள். உங்கள் கணிணியில் இருக்கும் மின்னஞ்சலையும் உடனடியாக அழித்துவிடுங்கள். அதோடு, உடன் வந்த இணைப்புக்களையும் அழித்துவிடுங்கள். இதற்கேற்றவாறு, உங்கள் மின்னஞ்சலின் அமைப்புக்களை வடிவமையுங்கள்.

• பெரும்பாலும் வைரஸ் செயல் நிரைகள் (VIRUS APPLICATIONS) மின்னஞ்சலில் வரும் இணைப்புகளாக, ஒரு செயலாக்கக் கோப்புகள் (EXECUTABLE FILE) மூலம் தான் வரும். அத்தகு கோப்புகளைத் திறக்காது உடனே அழித்துவிடுங்கள்.

• WINZIP கோப்புக்களாக வரும் செய்திகளையும், உங்களுக்குத் தெரிந்தவரிடமிருந்து வரும் நம்பகமான செய்தி என்றால் திறந்து படியுங்கள். இல்லையென்றால், அழித்துவிடுங்கள். சில சமயம் உங்கள் நண்பரின் கணிணி “ஸ்பாம்” (SPAM) தாக்குதலுக்கு ஆளாகியிருந்தால், அவரிடமிருந்து, (அவர்களுக்கே தெரியாமல் கூட) உங்களுக்கு “ஸ்பாம்” (SPAM) தாக்குதல் உண்டாகலாம். கவனமாக இருங்கள்.

• இணைய தளத்திற்குச் சென்றால், கீழ்க்கண்ட காரணங்களால், நீங்கள் “ஸ்பாம்” (SPAM) தாக்குதலுக்கு ஆளாவீர்கள். இதனைக் குறித்து கவனமாக இருங்கள்.


* முன்பின் அறிமுகமில்லாத, நம்பத் தகுதியில்லாத செய்திக் குழுவிற்கு (NEWS GROUP) எந்த செய்தியினையும் அளிக்காதீர்கள்.

* எந்தக் காரணம் கொண்டும், உங்கள் முகவரியினைக் கேட்கும், இணையதளச் சேவையினுக்கு அது நம்பகத் தன்மை இல்லாத ஒன்றாக இருக்குமானால், உங்கள் முகவரியினைத் தராதீர்கள்.


* ஆனால் சில தளங்கள் மின் முகவரி தரவில்லையென்றால், உங்களுக்கு அத்தளத்துள்ளே நுழைய அனுமதி மறுக்கலாம். இது அவர்கள் தளத்தினை, “ஸ்பாம்” (SPAM) தாக்குதலுக்கு உட்படாது தவிர்க்க அவர்கள் எடுத்துக் கொள்ளும் எச்சரிக்கை முயற்சி. அப்படித் தர வேண்டுமானால், பொது முகவரி அல்லது “ஒரு முறைப் பயன்பாட்டு முகவரிகளைப் ” பயன்படுத்துங்கள். YAHOO, HOTMAIL, GOOGLE போன்ற நல்லதொரு “ஸ்பாம்” (SPAM) மற்றும் “வைரஸ்” (VIRUS) கட்டுப்பாடுகள் சிறப்பாக உள்ள சேவைகளில் நீங்கள் உருவாக்கிய ஒரு முறைப் பயன்பாட்டு மின் முகவரியினைக் கொடுங்கள்.

•நீங்கள் ஏதேனும் வலைத்தளம் வைத்திருந்தால், உங்கள் மின் முகவரியினை அதில் குறிப்பிடாதீர்கள். “SPAMBOTS” எனப்படும் மின் முகவரியினைத் தேடி எடுக்கும் அமைப்பு “ஸ்பாம்” உருவாக்கும் நபர்களுக்காக, உங்கள் முகவரியினைப் பதிவு செய்து கொள்ளும்.

• எனது மின் முகவரியினை எடுத்து விடுங்கள்” (Remove My Email ID) என்று குறிப்பிடும் வசதியினை எப்பொழுதுமே நம்பாதீர்கள். பொதுவாக அத்தகு வசதிகள் உங்கள் முகவரி உண்மையானதுதானா, செயலில் இருக்கிறதா என அறிவதற்காக, “ஸ்பாம்” உருவாக்கும் நபர்கள் வைத்திருக்கும் “வலை”(TRAP).

• YAHOO, HOTMAIL, WEBMAIL, EUDORA போன்ற எல்லோரும் எல்லோராலும் அறியப்பட்ட மின்னஞ்சல் சேவைகள் சிறப்பான “ஸ்பாம்” (SPAM), மற்றும் “வைரஸ்” (VIRUS) கட்டுப்பாட்டு அமைப்புகளுடையவை. அவை செயலில் இருக்கிறதா என்பதனை அடிக்கடி உறுதி செய்து கொள்ளுங்கள். SPAM அல்லது JUNK MAIL என அதன் உதவிப் பகுதியில் (HELP FILES) உள்ள பக்கங்களைப் பார்க்கவும்.

* உதாரணத்திற்கு HOTMAIL.COM அமைப்பில் உள்ள சிறைப்படுத்தும் வசதி (QUARANTINE FOLDER) ஸ்பாமென நம்பும் மின்னஞ்சல்களை நீங்கள் அமைத்திருக்கும் விதிகளின்படி, தனிமைப் படுத்திவிடும் அல்லது அழித்துவிடும்.

* MICROSOFT நிறுவனத்தின் OUTLOOK /OUTLOOK EXPRESS இவற்றில் உள்ள வடிகட்டும் அமைப்பு (FILTERS) “ஸ்பாம்” (SPAM) என சந்தேகப்படும் மின்னஞ்சல்களை, அவற்றிற்கான விதிகளின்படி, பிரித்து, தனிமைப் படுத்தும் அல்லது அழித்துவிடும்.

* EUDORA அமைப்பில் உள்ள விதிகளின்படி, நீங்கள் ஸ்பாம் மின்னஞ்சல்களை இறக்குமுன்னரே, அழித்துவிடும் வசதி உள்ளது.


* இவற்றைத் தவிர ஸ்பாம் மற்றும் வைரஸ் இவற்றைக் கட்டுப்படுத்த தனிப்பட்ட சில சிறப்பான செயல் நிரைகள் உள்ளன.


* அவை உங்களின் மின்னஞ்சல் வரும் வழியில் உள்ள பிரதான SERVER பகுதியிலோ அல்லது இறங்கும் உங்கள் கணிணிப் பகுதியிலோ, அத்தகு ஸ்பாம்/வைரஸ் மின்னஞ்சலைக் கண்டுபிடித்து, அழித்துவிடும்.

* SERVER பகுதியில் அழிக்கும் வசதி நீங்கள் இறக்குமதி செய்யும் (DOWN LOAD) செலவினையும் குறைக்கும்.

இவை அனைத்திலுமே “FILTERS” எனப்படும் “வடிகட்டிகள்” பயன்படுத்தப்படுகின்றன. அவை “தடை செய்யப்பட்ட மின் முகவரிகள்” (BLACK LIST) “அனுமதிக்கப்பட்ட மின் முகவரிகள்” (WHITE LIST) என்றதன் பேரில் மின்னஞ்சலைப் பிரித்து, “அனுமதிக்கப்பட்ட மின் முகவரிகள்” (WHITE LIST) உள்ள மின்னஞ்சலை மட்டும் அளிக்கிறது. இந்த வடிகட்டிகளை உருவாக்க விதிகள் அடிப்படையிலான அணுகுமுறைகள் (LOGICS) பல உண்டு. அவற்றைப் பற்றி பிறிதொரு முறை பார்ப்போம்.

சில செயல் நிரைகள் மின்னஞ்சலில் உள்ளே இருக்கும் செய்திகளைப்படித்து, அவற்றில் உள்ள தடை செய்யப்பட்ட எழுத்துக்கள், சொற்கள், கோப்புகளின் இறுதி விரிவுகள் (FILE EXTENSION) இவற்றுக்கான ஏற்கனவே அமைக்கப்பட்ட விதிகளின்படி, பிரிக்கின்றன.


இவை அனைத்திலுமே “உண்மையான மின்னஞ்சல்” என்பது நம்மால் மட்டுமே கண்டுபிடிக்கக் கூடியது என்பதே உண்மை. எனவே JUNK MAIL அல்லது தனித்திருக்கும் கோப்புகளிலிருந்து பார்த்து அவை உண்மையானதா இல்லையா என நாம்தான் கண்டுபிடிக்க வேண்டும். இப்படிக் கண்டுபிடித்தவற்றுள் “ஸ்பாம்” என நாம் நினைப்பவற்றை “JUNK MAIL BOX” செல்ல மாற்றிவிடுங்கள். இதன் தர்க்க ரீதியான அமைப்பைப் படித்து, அதில் உள்ள மின் முகவரியிலிருந்து எதிர்காலத்தில் வரும் எந்த ஒரு மின்னஞ்சலையும் “JUNK BOX” ல் இறக்கிவிடும் அல்லது அழித்துவிடும்.

இது எல்லாவற்றையும் விட “பாட்னெட்ஸ்” (BOTNETS) எனப்படும் பல்லாயிரக்கணக்கான அகலக்கற்றை இணைப்புடைய (Broadband Connectivity) வீட்டுக் கணிணிகளின் ஒருங்கிணைந்த வலைக்கட்டு (NETWORK) மூலம் உண்டாக்கப்படும் தொல்லை சொல்லி மாளாது. இத்தகு கணிணிகள் “MALWARE அல்லது ADWARE எனப்படும் விளம்பரம் எளிதாகச் செய்ய வழிவகுக்கும் செயல் நிரைகளை உள்ளடக்கியதாய், மூன்றாம் மனிதர்களால் கட்டுப்படுத்த ஏதுவாக உள்ளது. ஸ்பாம் உருவாக்குபவர்கள் இத்தகு கணிணியினைத் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து அதன் மூலம் பல்லாயிரக்கணக்கில் தானியிங்கி மின்னஞ்சல்களை உருவாக்கி பெரிய நிறுவனங்களின் NETWORK மற்றும் SERVER செயல்பாட்டினை அழிக்கிறார்கள். இது பலவகைகளில் ஸ்பாம் அனுப்புபவர்களுக்கு உதவுகிறது.

1. பல்லாயிரக்கணக்கான கணிணிகள் முதலீடு செய்யாமல் கிடைக்கிறது.
2. இவற்றின் மூலம் அனுப்பப்படும் மின்னஞ்சலுக்குக் கட்டணம் கணிணியின் உரிமையாளர்தான் கொடுக்கப் போகிறார்கள் என்பதால், ஸ்பாம் அனுப்புபவ்ர்களுக்கு இலவசம்.
3. எண்ணிக்கை காரணமாகவும், இவை உலகின் பல இடங்களில் இருப்பதாலும், இவற்றைக் கண்டுபிடிப்பது “ஸ்பாம்” கண்காணிப்பவர்களுக்கு ஒரு சவால்; அப்படியே கண்டுபிடித்தாலும் கட்டுப்படுத்துவது உடனடியாக நடக்க வாய்ப்பில்லை; அப்படியே கண்டுபிடித்தாலும், யாரோ அதற்காகத் தண்டிக்கப்படப் போகிறார்கள்.
4. ஒரே நேரத்தில் பல்லாயிரக் கணக்கான மின்னஞ்சல் அனுப்பும் வசதி செலவே இல்லாமல் எளிதாகக் கிடைக்கிறது.
5. நம்முடைய கவனக் குறைவாலும், விவரமறியாது கணிணியினைப் பயன்படுத்துவோர் அதிகம் என்பதாலும், “ஸ்பாம் அனுப்புபவர்களுக்கு, மென்மேலும் அதிகமான கணிணிகள் ஒவ்வொரு நாளும் கிடைக்கிற வாய்ப்பிருக்கிறது.

மின்னஞ்சல் மூலம் செய்தி அனுப்புவதும், CHAT எனப்படும் உரையாடலும் பெருகி வரும் இக்காலத்தில், இந்த ஸ்பாம் தடுக்கப்பட, பயன்படுத்துவோர் கணிணி பயன்பாடு மற்றும் அதனுடன் தொடர்புடைய மின்னஞ்சல், இணையதளம் மற்றும் CHAT எனப்படும் உரையாடல் குறித்த அனைத்திலும் அறிவுடையராக இருப்பதும், கவனமாக இருப்பதும் பெரிதும் அவசியமாகிறது .

அவ்ளோதாங்க
முழிச்சுக்கோங்க ஸ்பாம் பத்தி தெரிஞ்சுக்கோங்க..................

Comments

Popular posts from this blog

A list of movies of our favorite star சூர்யா !